நீலகிரியில் யானை வழித்தடம் வழக்கு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒருநாள் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீலகிரியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றை கண்டறிந்து அகற்றுவது தொடர்பான குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மேலும் ஒரு நாள் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் யானை வழித்தட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை நீக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 39 ரிசார்ட்டுகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் சீலிடப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் இயங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்திருந்தது. இதைத்தவிர குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் விவரங்களை ஜனவரி 27ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், “சட்டவிரோத கட்டிடங்களை நீக்கும் குழு உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்ய மேலும் ஒரு நாள் அவகாசம் வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஒருநாள் மட்டும் அவகாசம் வழங்கி நேற்று உத்தரவிட்டது. 


Tags : Govt ,Tamil Nadu , Nilgiris, Elephant Way, Case, Expert Panel, Report Filed, Government of Tamil Nadu, Supreme Court
× RELATED கோவில்பட்டியில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்