×

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு: மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி..!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் 9,398 இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது. நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அங்கு தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால், அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெயிலானார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இந்த மையங்களில் கண்டிப்பாக முறைகேடு நடந்திருக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேரை டிஎன்பிஎஸ்சி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 99 பேரும் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது தெரியவந்தது. இந்த முறைகேட்டின் பின்னணியில் பெரிய அளவில் இடைத்தரகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஈடுபட்டது உறுதியானதால் இந்த வழக்கு தமிழக அரசு உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் தலைமையில், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்களில் 65 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் மூலமே இம்முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட, டிபிஐ அலுவலக உதவியாளராக பணியாற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21), ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன் (38),

திருவாடானை தாலுகா, கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிறுகிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்த மு.காலேஷா (29) ஆகிய 7 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சீனிவாசன், சிவராஜ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வரை கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி  வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DNPSC Group-4 , DNBSC Group-4 Examination Abuse, Arrest, CBCID
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 ஏ...