×

சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்றுத்துறை மாணவிகள் களப்பயணம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தொல்லியல் பகுதிகளை பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி வரலாற்றுத் துறை மாணவிகள் பார்வையிட்டனர். 120 மாணவிகளும், பேராசிரியர்களும் களப் பயணமாக சிவகங்கை அருகே திருமலைக்கு வந்தனர். அங்கு 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் விலங்கின் மீது அமர்ந்து வேட்டையாடும் காட்சி மற்றும் பறவை முக மனிதர்கள் ஓவியங்களை பார்வையிட்டனர். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எழுத்து அமைந்த சமணப்பள்ளியைப் பார்த்து வியந்ததோடு தமிழி எழுத்துக்களை தங்கள் குறிப்பேடுகளில் எழுதிக் கொண்டனர். எட்டாம் நூற்றாண்டு பாண்டியர் கால குடைவரை கோவில் மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தின் சிவன் கோவிலையும் கண்டுகளித்தனர். அங்குள்ள மூன்று நூற்றாண்டு கால கல்வெட்டுகளை பார்த்து படித்துப்பார்த்தனர்.

சோழபுரத்தில் சுத்தானந்த பாரதியின் தவக்குடிலை பார்வையிட்டனர். பின்னர் சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர். அங்கே கோவில் கட்டடக்கலையையும், சிற்பங்களையும் பார்வையிட்ட வரலாற்று துறையினர் அலங்கார மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி அடங்கிய கல்வெட்டாக அது உள்ளது. 1956ல் ஏஎஸ்ஐ எனும் இந்திய தொல்லியல் அளவீட்டு துறை இக்கோவிலில் கல்வெட்டுகள் உள்ளதை பதிவு செய்துள்ளனர். இக்கல்வெட்டு கோவில் கட்டுமானத்தில் இல்லாது தனியாக வேறு ஒரு பகுதியில் காணப்படுவதால் கல்வெட்டை வாசித்து பார்த்தனர். காளையார்கோவிலில் உள்ள நல்லேந்தல் பகுதியில் கல் வட்டங்களை பார்வையிட்டனர். வரலாற்றுத்துறை தலைவர் ரோஜா, பேராசிரியர்கள் ரேணுகாதேவி, சாந்தி, விமலா ஆகியோர் உடன் இருந்தனர். களப்பயணம் வந்தவர்களை தொல் நடை அமைப்பை சார்ந்த ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் பகிரீதநாச்சியப்பன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா செய்திருந்தார்.

Tags : district ,Sivaganga , Sivaganga, History students, field trip
× RELATED ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொரோனா பற்றி...