×

தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து மனு விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.  டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கடந்த 10ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, ஒரு நபரை கைது செய்து விசாரணை இன்றி 12 மாதங்கள் சிறையில் அடைக்க டெல்லி ேபாலீசுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டார்.  இந்த உத்தரவு ஜனவரி 19ம் தேதி தொடங்கி 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `குடியுரிைம திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிராக போராடும் மக்களை கட்டுப்படுத்துவதற்கும், அவர்களுக்கு அழுத்தம் ெகாடுக்கும் வகையிலும்தான் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிராக இந்த சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.  இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த மனுவை வக்கீல் சர்மா வாபஸ் பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது எங்கே தேசிய பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டது என்பதற்கு சில நிகழ்வுகளை குறிப்பிட்டு இடைக்கால மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று கூறினர்.


Tags : Supreme Court ,National Security Act Supreme Court , National Security Act, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...