×

தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆபத்தான விளையாட்டு: மாநில முதல்வர்களுக்கு மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா: தேசிய மக்கள் பதிவேடு என்பது ஆபத்தான விளையாட்டு போன்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் நடத்தி வருகின்றார். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களிலும் கலந்து கொண்டு ஆதரவும் தெரிவித்து வருகின்றார். அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் வடக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை முதல்வர் மம்தா தலைமையேற்று நடத்துகிறார். இதற்காக அவர் நேற்று சிலிகுரி புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேசிய மக்கள் பதிவேடு என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டு. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முன்னோடியாகும்.

பாஜ ஆளும் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மணிப்பூர், மற்றும் அருணாச்சலப் பிரதேசம்  உட்பட அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து முடிவுக்கு வருவதற்கு முன்பாக தேசிய மக்கள் தொகை பதிவேடு படிவத்தில் உள்ள உட்பிரிவு வாக்கியங்களை கவனியுங்கள். இந்த விவகாரத்தில் பங்கேற்காதீர்கள். ஏனெனில் இதில் உள்ள நிபந்தனை மிக மோசமாக உள்ளது. பெற்றோர் பிறந்த விவரங்கள் கட்டாயமில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிறது.

விவரங்கள் கட்டாயமில்லை என்றால் ஏன் அவை படிவத்தில் இடம்பெற்றுள்ளது? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட வேண்டும். இவை தொடர்ந்து படிவத்தில் இடம்பெற்றால், பெற்றோரின் பிறந்த விவரங்களை குறிப்பிடாதவர்கள் தானாகவே விலக்கப்பட்டு விடுவார்கள். படிவத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களால் இது போன்ற அச்சம் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.  இவ்வாறு மம்தா குறிப்பிட்டார்.



Tags : National Population Record ,Mamta Warns To State Chiefs National Population Record ,Mamta Warns To State Chiefs , National Population Register, State Chiefs, Mamta
× RELATED தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை...