நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமான மழைப்பொழிவு..: இந்திய வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: ஜனவரி மூன்றாவது வார நிலவரப்படி நாடு முழுவதும் 120% மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழக்கத்தை விட இரண்டு முதல் 3 மடங்கு அதிகமான மழைப் பொழிவைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், ஜனவரி மாதத்தில் 300 விழுக்காடுக்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெற்றுள்ளதாகவும், வடகிழக்கு மாநிலங்களில், வழக்கத்தை விட திரிபுராவில் 670 விழுக்காடு மழையும், மிசோரம் மாநிலத்தில் 295 மழையும் பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்படும் காற்று காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டதாகவும், இமயமலைகளில் மோதிய அந்தக் காற்றின் தாக்கத்தினால் வடக்கத்திய சமவெளிகள் மற்றும் கங்கைச் சமவெளியில் மழைய் பெய்வித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய வானிலை மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி, இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்படும் காற்று காரணமாக மழையை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ஜனவரி 1 முதல் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட மழைப்பொழிவு வீழ்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதறகிடையில், குமரிக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : states ,country ,IMD , Rain, Indian Weather Center, Snowfall
× RELATED மழை குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு