×

கடைகளுக்கு ஆய்வு செய்ய செல்லாமல் நிர்வாக உத்தரவை மீறும் மாவட்ட மேலாளர்கள்: டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ஆய்வுக்கு செல்லாமல் நிர்வாகத்தின் உத்தரவை மீறி மாவட்ட மேலாளர்கள் செயல்பட்டு வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுரை, சேலம், சென்னை, திருச்சி, கோவை ஆகிய 5 மண்டலங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐந்து மண்டலங்களிலும் முதுநிலை மண்டல மேலாளர்கள் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கடைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க 20 நாளைக்கு ஒருமுறை மாவட்ட மேலாளர்கள் கடைகளுக்கு நேரடியாக ஆய்வு செல்ல வேண்டும். ஆய்வில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதம் தோறும் நிர்வாகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் மாவட்ட மேலாளர்கள் ஆய்வு நடவடிக்கைகளில் நேரடியாக செல்லாமல் சூப்பர்வைசர்களை கொண்டு ஆய்வில் ஈடுபடுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:

மாவட்ட மேலாளர்கள் 20 நாளைக்கு ஒருமுறை கடைகளில் ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் அதிகாரிகள் இந்த நடைமுறையை பின்பற்றுவது இல்லை. தங்களுக்கு கீழ் உள்ள சூப்பர்வைசர்களை வைத்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதேபோல், ஆய்வு நடவடிக்கைகளையும் பாரபட்சமாக நடத்துகின்றனர். சூப்பர்வைசர்களை ஏஜென்டாக பயன்படுத்துகின்றனர். மாவட்ட மேலாளர்கள் நேரடியாக ஆய்வுக்கு வராததால் சூப்பர்வைசர்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இதனால் ஊழியர்கள் கடும் மனஉளைச்சலை சந்தித்து வருகின்றனர். இதேபோல், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் ஊழியர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அடையாள அட்டையை அணிந்து அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதில்லை. எனவே, இதுகுறித்து நிர்வாகத்திடம் புகார் அளிக்க ஊழியர்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.

Tags : District managers ,stores , Shop, Inspection, Administrative, District Managers, Taskmakers, Charge
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...