தொழிலதிபர் வீட்டில் 2.75 லட்சம் திருட்டு: டிரைவருக்கு வலை

அண்ணாநகர்: சென்னை முகப்பேர், பன்னீர் நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (54). கடல்வாழ் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவரிடம், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த்குமார் (28) என்பவர், கடந்த 8 மாதமாக டிரைவராகவும், வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஹரிதாஸ் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டுக்குள் பீரோ திறந்து இருப்பதையும், அதில் வைத்திருந்த 2.75 லட்சம் மாயமானதையும் கண்டு திடுக்கிட்டார்.

ஹரிதாஸ் இதுபற்றி வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரித்தபோது, ஹேமந்த்குமார் வீட்டுக்கு வந்ததும், அதன்பின்னர் தலைமறைவானதும் தெரியவந்தது. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து நொளம்பூர் போலீசில், ஹரிதாஸ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஹேமந்த்குமாரை தேடி வருகின்றனர்.


Tags : businessman ,driver Businessman ,home ,theft , Businessman's home, 2.75 lakh, theft, web to driver
× RELATED மேட்டூர் அருகே தொழிலதிபர் கொலை...