உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ‘குயின்’ இணையதள தொடருக்கு தடை கோரி பொதுநல வழக்கு

சென்னை : உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ம்  தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையதள தொடர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இணையதள தொடரை வெளியிட்டால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. தேர்தல் நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9ம் தேதி கோரிக்கை மனு அளித்திருந்தேன். எனவே, அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து குயின் இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Queen ,elections , Welfare case demanding ,ban on Queen's website
× RELATED வெப் சீரிஸில் இன்னொரு ஹீரோயின்