மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கு: ஜனவரி 2ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் நவம்பர் 1ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜுனன் தவசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவற்றிற்கு லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்கக்கூடாது. குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்தபட்சம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். மேலும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் வழங்கியிருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு விசாரித்தது. நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்படவுள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த  போது, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று தெரிவித்தனர்.


Tags : Mamallapuram ,IOC ,Icort , Mamallapuram, January 2, Report, Government of Tamil Nadu, Icort Order
× RELATED மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும்...