×

விதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம்

சென்னை: சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் ஆட்ேடாக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்ட புகார்கள், போக்குவரத்துத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான நடவடிக்கையினை துரிதப்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தற்போதைய நிலவரப்படி சுமார் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இவை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், வயதானவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று வருவதற்கும், அலுவலகத்திற்கு செல்வதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கால்டாக்சியை விட ஆட்டோக்களில் கட்டணம் சற்று குறைவாக இருப்பதால், இப்பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்ெகாள்ளும் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர், பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கூடுதல் கட்டணம் வசூல் செய்வது, பயணிகளை மிரட்டுவது, நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பயணிகளை ஏற்றுவது, ஓட்டுனர் இருக்கையில் பயணிகளை அமர்த்தி இயக்குவது, சீருடை அணியாதது என்பது போன்றவை அதிக அளவில் நடக்கிறது.  ஒருசில இடங்களில் நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும். இதிலிருந்து இறக்கும் பொதுமக்களை, அங்கு வரிசையாக நின்று கொண்டிருக்கும் ஆட்ேடா ஓட்டுனர்கள், வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து தங்களது ஆட்டோக்களில் ஏற்றும் சம்பவமும் நடக்கிறது.  இதனால் சென்னைவாசிகள் மட்டும் அல்லாது பிற இடங்களில் இருந்து புதிதாக இங்கு வருவோரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பாதிக்கப்படும் மக்கள் சென்னை, எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்து வருகிறனர். தற்போது இது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள், விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள் குறித்து புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி பலரும் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி மாதம்தோறும் 500க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான நடவடிக்கையினை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தன.


Tags : Violation, autos, authorities program
× RELATED முத்தியால்பேட்டை - ராஜகுலம்...