வெங்காயம் வாங்க நின்ற முதியவர் மாரடைப்பால் சாவு

திருமலை: ஆந்திர அருகே உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மாரடைப்பால் இறந்தார். ஆந்திரா முழுவதும் உழவர் சந்தைகளில் அரசு ஒரு கிலோ வெங்காயம் 25க்கு விற்பனை செய்கிறது. ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படுகிறது. உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் வரிசையில் நின்று வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இதனால் உழவர் சந்தைகளில் மூன்று கி.மீ. தொலைவு வரை வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் உழவர் சந்தைகளில் வெங்காயம் விற்பனை நடைபெற்றது.

அதில் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா நகரிலுள்ள உழவர் சந்தையில் வெங்காயம் வாங்குவதற்காக ஆவனிகண்டா பகுதியை சேர்ந்த சாம்பையா (60) என்பவர் வரிசையில் காத்திருந்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் அவர் சோர்வுற்று காணப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். முதியவர் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Onions, old man's death ,heart attack
× RELATED மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது