×

தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நடந்து வரும் 13வது தெற்கு ஆசிய விளையாட்டுப்  போட்டிகளில் 3ம் தேதி நடந்த கைப்பந்து போட்டியில்  பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிய அணியின் கேப்டன் ஜெரோம் வினித்  தங்கம் வென்றதோடு சிறந்த ஆட்ட நாயகன் என்ற பதக்கமும் பெற்றார்.  இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கேப்டன் ஜெரோம் வினித், பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் பங்கேற்றனர். இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வெற்றிக் கோப்பையை வாங்கிய கையோடு கேப்டன் ஜெரோம் வினித் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காடு கிராமத்திற்கு வந்தார். அவருக்கு கிராமத்தினர் சார்பில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதோடு, தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்த்த ஜெரோம் வினித்தை ஊா் மக்கள், மாணவ, மாணவிகள், இளைஞா்கள் உள்ளிட்டோா் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேபாளத்தில் நடைபெற்ற தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்தின் தாத்தா மொழிப்போர்த் தியாகி என்பது சிலிர்ப்படையச் செய்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் ஆடுகளமானாலும், போராட்டக்களமானாலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஜெரோமுக்கு தொடர்ந்து பல வெற்றிப் பதக்கங்கள் வசமாகட்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Jerome Vinith ,MK Stalin ,South Asian Games ,Indian National Volleyball , Asian Games, Gold, Indian Volleyball Team, Captain Jerome Vineet, MK Stalin Greetings
× RELATED தமிழ் மக்கள் வாழ்வில் இருள் அகன்று, ...