×

9 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றி இன்று மாலை புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்ததால், ஆணையம் அதற்கான பணிகளை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மாநிலம் முழுவதும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்கப்படாததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் முறையிட்டனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.கவாய், சூர்யகாந்த் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

அதில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம். மேலும், புதிய மாவட்டங்கள் அனைத்திலும் அடுத்த 4 மாதங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்து, அதற்கும் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு விவகாரத்தை பொருத்தமட்டில், பஞ்சாயத்து தேர்தல் சட்ட விதிகளின் அடிப்படையில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் இன்று அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து இன்று மாலை 9 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேர்தலுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Election Commission ,elections ,Election ,State Election Commission ,Supreme Court , Local Election, Supreme Court, Election Notification, State Election Commission
× RELATED தேர்தல் ஆணையத்தை நம்பமுடியல..திடீரென...