×

சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்

புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2ம் தேதி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், “சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த பொன்.மாணிக்கவேல் அது தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கை ஆகியவற்றை துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் சிலைக் கடத்தல் பிரிவின் புதிய ஐ.ஜியாக ஐபிஎஸ் அதிகாரி அன்புவை நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ‘‘பொன்.மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’’ என தெரிவித்தார்.   இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தொடரப்பட்டுள்ளது. அதில், “நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் இன்னமும் ஒப்படைக்கவில்லை. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.  இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாக நேற்று தெரிவித்தது.


Tags : Ponni Manikkel ,Tamil Nadu , Statue trafficking case, ponmanikkavel, the Supreme Court, the State Government
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50%...