×

குறைந்த அளவே புழக்கம் ஐடி ரெய்டில் 2,000 சிக்குவது குறைகிறது: அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வருமான வரி சோதனையில் 2,000 நோட்டு சிக்குவது குறைந்துள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.  கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் வகையில் பழைய 500 மற்றும் 1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ல் மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு, புதிய 500, 2,000 மற்றும் 200 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2,000 நோட்டு கள்ள நோட்டு பதுக்கலுக்கு வித்திடும் என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன. இதற்கேற்ப 2,000 நோட்டு கட்டுக்கட்டாக பிடிபட்டது. பின்னர், 2,000 நோட்டு புழக்கம் படிப்படியாக குறைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. எனவே, பதுக்கல்காரர்களும் 2,000 நோட்டு பதுக்குவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:  கடந்த 3 நிதியாண்டுகளாக நடந்த வருமான வரி ரெய்டில் ₹5 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட நோட்டு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரெய்டில் பறிமுதல் செய்த ₹2,000 நோட்டு எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கணக்கில் காட்டப்படாமல் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணத்தில் ₹2,000 நோட்டு 2017-18 நிதியாண்டில் 67.9 சதவீதமாக இருந்தது. இது 2018-19 நிதியாண்டில் 65.9 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரெய்டில் பிடிபட்ட பணத்தில் 2,000 நோட்டு 43.2 சதவீதம் மட்டுமே என கூறியுள்ளார்.

 ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, 2017 மார்ச்சில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 2,000 நோட்டு ஏறக்குறைய பாதியாக இருந்தது. தற்போது இது 31 சதவீதமாக குறைந்து விட்டது. 2018 மார்ச்சில் 6.7 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு, கடந்த மார்ச் மாதத்தின்படி 6.6 லட்சம் கோடியாக குறைந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Tags : IDQ , it raide
× RELATED வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்...