×

ஆண்டுக்கணக்கில் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் எட்டயபுரம் அரசு விடுதியில் குடிநீரின்றி தவிக்கும் மாணவிகள்

எட்டயபுரம்: எட்டயபுரம் அரசு மாணவியர் விடுதியில் அதிகாரிகள் அலட்சியத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அவதிப்படும் மாணவிகள், இதற்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 67 பேர் இங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி அருகே இயங்கி வரும் பாரதியார் நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.  விடுதி ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

சில மாதங்கள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் குடிநீர் வருவது நிறுத்தப்பட்டது. தற்போது அந்த தொட்டி விடுதியில் காட்சி பொருளாக உள்ளது. விடுதியில் உள்ள அடிபம்பில் தான் மாணவிகள் கழிப்பறைக்கும் குளிப்பதற்கும் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். இதனால் குடிப்பதற்கு மட்டும் தண்ணீரை விலைக்கு வாங்கும் ஊழியர்கள் சமையல் மற்றும் பிறதேவைக்கு விடுதிக்கு முன்புறம் உள்ள பயன்பாட்டில் இல்லாத தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் தேங்கும் மழைநீரை எடுத்து பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.விடுதியின் முன்புறம் தான் சீவலப்பேரி குடிநீர் குழாய் செல்கிறது. அந்த குழாயில் இருந்து திட்டங்குளம், இளம்புவனம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் 67 மாணவிகள் படிக்கும் அரசு விடுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர்.இந்த விடுதி இளம்புவனம் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டு இருப்பதால் எட்டயபுரம் பேரூராட்சி சீவலப்பேரி குடிநீர் இணைப்பு வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இளம்புவனம் பஞ்சாயத்து நிர்வாகமும் விடுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்வில்லை. இதனால் அவதிப்படும் மாணவர்கள், இதுவிஷயத்தில் கலெக்டர் தலையிட்டு, உடனடியாக  விடுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதோடு இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags : Etiyapuram Government Hotel , Government accommodation
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு