×

சமைக்கும் ரோபோ! நமக்கு இது புதுசு

“சமையலறை என்னவாக இருக்கிறது? பெண்களின் உழைப்பைச் சுரண்டுகிற இடமாகவும், சிந்தனையை ஆக்கிரமிக்கும் இடமாகவும் தான் இருக்கிறது. சமைலறையை சுலபமாக்க உணவுத்துறை விஞ்ஞானிகள் எத்தனையோ தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரித்திருந்தாலும் சமையலறை நம் நேரத்தைச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறது” என்கிறார் சரவணன் சுந்தரமூர்த்தி.‘ரோபோசெஃப்’ (ROBOCHEF) என்னும் தன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதனை உருவாக்கி இருக்கும் சரவணன் சுந்தரமூர்த்தியின் பூர்வீகம் கடலூர். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். பி இ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு வெளி நாடுகளில் வேலைப் பார்த்து வந்த சரவணன் ஒரு சமையலறையில்  மிக்சி, கிரைண்டர் இருப்பதைப் போல கேஸ், ஸ்டவ் இருப்பதைப் போல எளிய மக்களின் சமையலறைகளுக்கு ரோபோ செஃப் மெஷினையும் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்று சொல்லும் சரவணன் சுந்தரமூர்த்தியிடம் ரோபோடிக் கிச்சனை (ROBOTIC KITCHEN) பற்றிக் கேட்டோம்.

“தொழில்நுட்பம், ரோபோ னு  சொன்னாலே நம்ம நினைவுக்கு வர்ற நாடுகள் ஜப்பானும், கொரியாவும் தான். அந்த எண்ணத்தை உடைக்கணும்னு தோணுச்சி. அதனாலே நாங்க தயாரித்து இருக்கிற ரோபோசெஃப் மெஷினை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பிலே உருவாக்கி இருக்கோம்.  வேலைக்காக சொந்த ஊரை விட்டுட்டு நகரத்துக்கு வந்து வசிக்கிறவங்க வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குறதைப் பார்க்கிறோம். சுவையாச் சாப்பிடலாம்னு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலும் நம்ம எதிர்பார்க்கிற சுவை இருக்கிறதில்லை.|சரி. பிரபலமான ஓட்டலுக்குப் போய் சுவையா சாப்பிடலாம்னு நினைச்சாலும் ஒரு நாள் இருக்கிற சுவை அடுத்த நாள் இருக்கிறதில்லை. அங்க சமைக்கிறவங்களையும் குறை சொல்ல முடியாது. வீட்ல நடக்கிற நிகழ்சிகள்லே ஃபேமசான சமையல் கலைஞரை வச்சி சமைச்சாலும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான டேஸ்ட் இருக்கிறதில்லை. இது எங்களுக்குப் பெரிய கேள்விக்குறியா இருந்துச்சி.

உணவு அரோக்கியமாவும், சுவையாவும், சுகாதாரமாவும் இருக்கணும். அதே சமயம் சீக்கிரம் சமைக்கணும். டேஸ்டும் எப்பவுமே மாறக் கூடாது. அப்படி ஒரு சுவையான உணவை மக்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சோம் அந்த  எண்ணத்திலே உருவானது தான் ரோபோசெஃப் எந்திர மனிதன் ஐடியா.
ரோபோசெஃப் சமைக்கும் எந்திர மனிதனை உருவாக்கப் பதினெட்டு வருசமா எங்க நிறுவனத்திலே முயற்சிப் பண்ணிட்டு இருந்தோம். கடந்த ஆறு வருசமா எங்க குழுவோடு சேர்ந்து இந்த மெஷினை தயாரிச்சோம். இந்தியாவிலே ரோபோசெஃப் சமைக்கிறது இது தான் முதல் தடவை. இந்த இயந்திர மனிதனை அறுநூறு வகையான ரெசிப்பிகளை சமைக்கிற மாதிரி வடிவமைச்சி இருக்கோம். இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து போன்ற  நாடுகளோட உணவு வகைகளைச் சமைக்கிற வசதியும் இதிலே இருக்குது. சராசரியா ஒரு நாளைக்கு மூனாயிரம் பேருக்கு சமைச்சி விநியோகம் பண்ணலாம்.

ஒரு நாளைக்கு ஒரு பெண் குறைஞ்சது ஆறு மணி நேரத்தை சமைக்கிறதுக்கு மட்டும்  செலவு பண்ணுறாங்க. நிறைய பெண்கள் சமைக்கிறதுக்கான நேரத்தை ஒதுக்க விரும்புறதில்லை. ஏன்னா உழைப்பைக் கேட்கிற இடமா சமையலறை இருக்குது. ஓட்டல், ரெஸ்ட்டாரண்டுகள்லே அதிகாலையிலே எழுந்து உணவு தயாரிப்பாங்க. அங்க வேலைப் பார்க்குறவங்களுக்கு தொடர்ந்து ஒரே மாதிரி சமைக்கிறதாலே சலிப்பு ஏற்படும். அந்த சலிப்பு அவங்க தயாரிக்கிற உணவோட சுவையிலும் பிரதிபலிக்கும். சாப்பிட வர்றவங்களுக்கு அது ஏமாற்றமா இருக்கும்.  இதையெல்லாம் மாற்றி அமைச்சி மனிதர்களோட உதவி இல்லாம தானியங்கி முறையிலே உணவுத் தயாரிக்க முடியுமான்னு ஆய்வு பண்ணோம்.

எங்களோட தொடர் முயற்சியிலே ரோபோசெஃப் பை வடிவமைச்சோம். இந்த ரோபோசெஃப் மூலமா சமைக்கிற நேரத்தைக் குறைக்க முடியும். சுவை மாறாம எல்லா உணவையும் தயாரிக்க முடியும்ணு எல்லோருக்கும் உறுதிப்படுத்திக் காட்டினோம். உதாரணத்துக்கு மதுரை சிக்கன் பிரியாணிய ரோபோசெஃப் சமைச்சா இந்தியாவிலே மட்டும் இல்லை. உலகத்திலே எங்க போய் சாப்பிட்டாலும் அதே சுவை தான் இருக்கும். ரோபோசெஃப்போட பெரிய பலமே அது தான்.  நான் நண்பர்கள்கிட்டே சமைக்கிறதுக்காக ரோபோடிக் மனிதனை உருவாக்க போறேன்னு சொன்னதும் சாதாரணமாவும், காமெடியாவும் என்னைப் பார்த்தாங்க. இன்னைக்கு எங்க குழுவோடு சேர்ந்து அதைச் சாத்தியப் படுத்தி காட்டி இருக்கிறேன். நாங்க தயாரிச்சி இருக்கிற இந்த ரோபோசெஃப் பதினெட்டாவது ஹார்டுவேர் வெர்ஷன்.

இந்தத் துறையிலே இருக்கிற முன்னணி நிறுவனங்களே இது சம்மந்தமா ஆய்வு நிலையிலே இருக்கும் போது உங்களால முடியுமான்னு நிறைய நண்பர்கள் கேட்டாங்க. முழு மனசோட வெற்றி கிடைக்கும்னு நம்பினோம். எங்க குழுவோட சேர்ந்து கடினமா உழைச்சோம். இந்த நேரத்தில என் குழுவை சார்ந்தவங்களுக்கு என் நன்றிய சொல்லணும். என்னைப் பார்த்து முடியுமான்னு கேட்டவங்களுக்கு எல்லாம் ரோபோசெஃப் மெஷின் மூலமா பதிலடி தந்திருக்கோம்.  வணிகத்துக்காக ரோபோசெஃப். இல்லத்தரசிகளுக்கு ரோபோசெஃப் மினி -னு ரெண்டு வகையான மெஷினை அறிமுகப்படுத்தி இருக்கோம். இந்த மெஷின்லே சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, சாம்பார், சாதம், ரசம், சர்க்கரைப் பொங்கல் என அறுநூறு வகையான உணவுகளைத் தயாரிக்கலாம்.

எதை சமைக்கப் போறீங்களோ அதற்கு தேவையானப் பொருளை மெஷின்ல செலுத்தணும். இது மட்டும் தான் நீங்க பண்ற வேலை. இந்த ரோபோசெஃப் மெஷினுக்குள்ள முப்பத்தெட்டு ஹார்ப்பஸை அமைஞ்சிருக்கோம். இது மட்டும் இல்லாம காய்கறி, இறைச்சி வைக்கிறதுக்காகப் பதினெட்டு ஹார்ப்பர்ஸை அமைச்சிருக்கோம். காய்க் கறியக் கூட மெஷினே வெட்டிரும். நீங்க என்ன உணவு சமைக்கிறீங்களோ அதற்கான ஆப்பை டவுன்லோட் பண்ணி கிளிக் பண்ணா போதும் குறைவான நேரத்திலே சுவையான உணவைத் தயார் பண்ணி கொடுக்கும். ஒரு வேலை உங்க வீட்லே நோயாளிகள் இருந்தா அவங்களுக்கு தேவையான உப்புக் காரத்தோட சமைச்சி தந்திரும். அதற்கு ஏற்ற மாதிரி மெஷின்லே தேர்வு பண்ணணும்.
ரோபோசெஃப் மெஷின் வந்துட்டா சமையல் கலைஞர்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்படும்னு நீங்க நினைக்கலாம். நிச்சயம் பாதிக்காது. இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். ட்ராஃபிக் சிக்னல் வர்றதுக்கு முன்னாடி போக்குவரத்து காவலர்கள் தான் போக்குவரத்தை கட்டுப்படுத்திட்டு இருந்தாங்க. அதனாலே ட்ராஃபிக் போலீஸ்களுக்கு வேலை போயிரும்னு  சொன்னாங்க. ஆனா அப்படி நடக்கலையே. என்னைக்குமே தொழில்நுட்பம் வேலைகளை எளிமையா ஆக்குமேத் தவிர அவங்க வேலைய ஆக்கிரமிக்காது. வேலையும் போகாது.

சமையல் கலைஞர் எல்லோருமே ஒரே மாதிரிச் சமைக்க மாட்டாங்க. ஆனா மெஷின்லே எல்லா வாடிக்கையாளருக்கும் எப்பவுமே மாறாதச் சுவையயைக் கொடுக்க முடியும். ஏன்னா நாங்க இந்த மெஷினுக்கு மென்பொருள் வடிவமைக்கும் போது பல்வேறு நாட்டைச் சேர்ந்த சமையல் கலை வல்லுநர்களைப் பங்கெடுக்க வச்சோம். சுருக்கமா சொல்லணும்னா இந்த எந்திர மனிதன் நீங்க சொல்றதை எல்லாம் கேட்கும். நீங்க பத்து பேருக்கு சமைச்சாலும், பத்தாயிரம் பேருக்கு சமைச்சாலும் ஒரே மாதிரியான சுவையை தர்றது தான் இதனோட பெரிய வெற்றியா பார்க்கிறேன்.   
ஓட்டல்லே உணவு தயாரிக்கிறதைப் பார்க்கும் போது சுத்தமா இருக்குமாங்கிற சந்தேகம் வரும். ஆனா மெஷின்ல தயாரிக்கும் போது அந்த சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஏன்னா சுகாதாரமா சமைக்கிற மாதிரி வடிவமைச்சி இருக்கோம்.  என்னதான் இருந்தாலும் மெஷின்ல சமைக்கிற சாப்பாடு உடம்புக்கு பிரச்சனை ஏற்படுத்தும்னு சந்தேகம் வரலாம். கண்டிப்பா எந்த பிரச்சனையும் வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. வடிவமைக்கும் போதே உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத விதமாத் தான் வடிவமைச்சி இருக்கோம்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்திலே ‘சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம்’ என்கிற விருது வாங்கி இருக்குது இந்த ரோபோசெஃப். துபாய் அரசாங்கம் உலக அளவிலே நடத்தின கண்காட்சியிலே ரோபோசெஃப் எந்திர மனிதனை தேர்வு பண்ணாங்க. அங்க வந்தவங்க கிட்டே நிறைய பாராட்டும் கிடைச்சது. சுவை, ஆரோக்கியம், சுகாதாரம் இது தான் ரோபோசெஃப் மெஷினின் ரகசியம். இப்போ மக்கள் கிட்டே வரவேற்பைப் பெற்று வருது. அடையாறு, ஆலந்தூர் ரெண்டு இடத்திலேயும் ரோபோசெஃப் கிட்ச்சனை தொடங்கி இருக்கிறோம். அடுத்து சென்னை முழுக்க மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு கிட்ச்சன் ஆரம்பிக்க போறோம். குறைந்த விலையிலே ரோபோசெஃப் மெஷினை தயாரிச்சி எளிய மக்கள் கிட்டேயும் இதைக் கொண்டு போகணும். எங்க நிறுவனத்தோட அடுத்தக் கட்ட முயற்சியா கமர்ஷியல் விமானங்களைத் தயாரிக்கப் போறோம்” என்று கண்களில் நம்பிக்கை மின்ன சொல்கிறார் சரவணன் சுந்தரமூர்த்தி.

தீக்சா தனம்
Tags : Cooking, robot, kitchen, technology
× RELATED கடவுள்களை உருவாக்கும் கலை