×

சிலை கடத்தல் வழக்கு விவகாரம் விசாரணை அறிக்கையை உயர்அதிகாரியிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேல் விசாரணை அறிக்கையை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது செல்லும் என்றும், அதற்கான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு உண்டு எனவும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை பொன்.மாணிக்கவேல் தமிழக சிலை கடத்தல் பிரிவு உயர் போலீஸ் அதிகாரியிடம் (ஏடிஜிபி) ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிலை கடத்தல் விவகாரத்தில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதில் இருந்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளை மதிப்பதில்லை. மேலும் அவர்களுக்கு வழக்கு தொடர்பான ஒத்துழைப்பையும் அளிப்பது கிடையாது. இதில் விசாரணை விவரங்களை தமிழக போலீசாரிடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இதுவரை வழக்கு தொடர்பாக எதையும் பொன்.மாணிக்கவேல் கொடுக்கவில்லை. மேலும் அவர் நவம்பர் 30ம் தேதியோடு பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அதனால் சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை தமிழக சிலை கடத்தல் பிரிவு உயர் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என அதில் குறிப்பிடப்பட்டது.

 இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் இதுவரை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மீறி செயல்படுகிறார். இதில் விரைவாக அவர் பணி ஓய்வுபெற உள்ளார் என வாதிட்டார்.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்மனுதாரரான யானை ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, “தமிழகத்தின் சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் மாநில அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பு உள்ளது’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கை நீதிமன்றம் டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கிறது. இருப்பினும் இந்த விவகாரத்தில் சிறப்பு அதிகாரியாக இருக்கக்கூடிய பொன்.மாணிக்கவேல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து அறிக்கை மற்றும் ஆவணங்களை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் விசாரணை அறிக்கையை கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டிய சூழல் பொன்.மாணிக்கவேலுக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : High Commissioner ,Supreme Court Action ,Supreme Court , Statue of Smuggling, Supreme Court
× RELATED மறு உத்தரவு வரும் வரை பி.எஸ் 4 ரக...