×

பெயரளவுக்கு தெரிவுக்குழு கூட்டம் நடத்துகின்றனர் தலைமை தகவல் ஆணையர் தேர்வு நடைமுறை ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல: மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தலைமை தகவல் ஆணையர் தேர்வு நடைமுறை ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்றும், பெயரளவுக்கு தெரிவுக்குழு கூட்டத்தை நடத்துகின்றனர் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தலைமை தகவல் ஆணையர் பதவியை நியமனம் செய்து நிரப்புவதற்கான பரிந்துரையை மாநில கவர்னருக்கு அனுப்ப இன்று (நேற்று) முதல்வர் தலைமையில் நடைபெறும் தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை அரசு செயலாளர் ஸ்வர்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர் பதவியை நியமனம் செய்து நிரப்புவதற்கான பரிந்துரையை மாநில கவர்னருக்கு அனுப்ப இன்று (நேற்று) முதல்வர் தலைமையில் தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

அக்கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும் அதன் பரிந்துரை தெரிவுக்குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? அவர்களின் “பயோ டேட்டா” விவரங்கள் உள்ளிட்ட எந்த தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை. மிகவும் அவசியமான மேற்கண்ட அடிப்படை தகவல்களே கடிதத்தில் இணைக்கப்படாததால் தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து தெரிவுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களின் விவரங்களையே கொடுக்காமல் கூட்டத்தை நடத்துவதால் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான ஒரு தேர்வினை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை என்பதும், முன்கூட்டியே “மாநில தலைமை தகவல் ஆணையர்” யார் என்பதை முடிவு செய்து விட்டு பெயரளவிற்கு இந்த தெரிவுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாக கருதுகிறேன்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. அது மட்டுமின்றி, தமிழக அரசில் பரந்துவிரிந்து கிடக்கும் ஊழல் தொடர்பான முக்கிய விவரங்களை மூடிமறைப்பதற்கான முயற்சியில் அரசு துவக்கத்திலேயே ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன். ஆகவே வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத மேற்கண்ட பொருள் குறித்த தெரிவுக்குழு கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

திராவிடக் கருத்தியலை திமுக என்றும் பாதுகாக்கும்:
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பாதுகாக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங். தலைவர் சந்திப்பு:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்றிரவு சந்தித்து பேசினார். சந்திப்பின்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மலேசிய பாண்டியன் எம்எல்ஏ, கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி வியூகம் குறித்து இரண்டு தலைவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Tags : Chief Information Commissioner ,MK Stalin , Election of Chief Information Commissioner, MK Stalin, Letter
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களின்...