×

மின்னணு வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு பற்றி பதிலளிக்காத தேர்தல் ஆணையம்: தலைமை தகவல் ஆணையர் கண்டனம்

புதுடெல்லி: வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காத தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தகவல் ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், வாக்காளர் தங்களுடைய வாக்குபதிவை உறுதி செய்யும் விவிபேட் கருவி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பினர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக் வாக்குபதிவு இயந்திரங்கள்,விவிபேட் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் நம்பகத்தன்மை குறித்தும் இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி கேட்டிருந்தனர். ஆனால் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கேட்டிருந்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ஆர்டிஐ விதியின் கீழ் குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையம் பதிலளிக்காததையடுத்து ஒன்றிய தகவல் ஆணையத்தை தேவசகாயம் அணுகியுள்ளார்.

இந்நிலையில் இது பற்றி ஒன்றிய தலைமை தகவல் ஆணையர்(சிஐசி) ஹீராலால் சமாரியாவிடம் கேட்டபோது, ‘‘எம்.ஜி.தேவசகாயம் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் திருப்திகரமான பதில் அளிக்காதது சட்டத்தை மீறிய செயல். இதனால், தற்போது உள்ள தேர்தல் ஆணையத்தின் தகவல் ஆணையர் மூலம் அப்போதிருந்த தகவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு வேறு யாரும் பொறுப்பு என்றாலும் அவர்களுக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பி, அதன் நகலை தலைமை தகவல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post மின்னணு வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு பற்றி பதிலளிக்காத தேர்தல் ஆணையம்: தலைமை தகவல் ஆணையர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chief Information Commissioner ,NEW DELHI ,IAS ,MG Devasakayam ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால்...