×

அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.12 ஆயிரம் கோடியில் ஆந்திர அரசு புதிய திட்டம்: 45 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்த முடிவு

அமராவதி: கட்டமைப்பு, நவீன வசதிகளுடன் அரசுப் பள்ளிகளைச் சீரமைக்க ஆந்திரப் பிரதேச அரசு ரூ.12 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஓங்கோலில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நம் பள்ளி இன்றும் நாளையும் என்ற இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள 45 ஆயிரம் அரசுப் பள்ளிகளும் அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான மாற்றத்தைப் பெற உள்ளன. இத்திட்டம் 9 அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறது. விளக்குகள், மின்விசிறிகள், கரும்பலகைகள், பள்ளி ஃபர்னிச்சர்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் அமைத்தல், வகுப்பறைகளைப் பழுதுபார்ப்பது மற்றும் ஓவியம் தீட்டுவது, தரமான குடிநீர் வழங்குதல் மற்றும் ஆங்கில ஆய்வகங்கள் அமைத்தல் ஆகியவையே அந்த 9 அம்சங்கள்.

முதற்கட்டமாக ஒரு வருடத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,715 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அடுத்தகட்டமாக கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது, மதிய உணவுத் திட்டத்தின் தரத்தை உயர்த்துவது, சரியான நேரத்துக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்குவது, சரியான ஆசிரியர்- மாணவர் விகிதத்தைப் பராமரிப்பது, ஆங்கில வழிக் கல்வியுடன் தெலுங்கு அல்லது உருது மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது ஆகிய செயல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதே போல தனியார் பள்ளிகள் செயல்படும் விதத்தைக் கண்காணிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்ப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தொழில்நுட்பங்களால் நிறைந்துள்ள உலகில், போட்டி போட முடியாமல் அடுத்த தலைமுறையினர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நாம் காரணமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்துள்ள ஜெகன் அரசு, வரும் ஜனவரி 9-ம் தேதி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Andhra Pradesh ,state schools ,government schools , Government School, Andhra Pradesh, Decision
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...