×

கன்னிகைப்பேர் கிராமத்தில் அரசு பள்ளியில் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்: தேர்தலை நடத்த வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நேற்று பள்ளி வளாகத்தில் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தில் நேற்று பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர் என தலைமையாசிரியர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அப்பள்ளி வளாகத்தில் ஏராளமான பெற்றோர் குவிந்திருந்தனர். அப்போது தலைமையாசிரியருக்கு ஒரு போன் வந்துள்ளது. பின்னர் அங்கிருந்த மக்களிடம் கூறுகையில், என்னை வேறு ஊருக்கு மாற்றல் செய்துள்ளனர். நீங்கள் புது தலைமையாசிரியர் பொறுப்பேற்றதும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என தலைமையாசிரியர் வேதனையுடன குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் அதிர்ச்சியான 100-க்கும் மேற்பட்ட பெற்றோர், பள்ளி வளாகத்தில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை. இங்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கண்டன கோஷங்கள் எழுப்பிய பிறகு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Parental agitation in government school in Kannikaiper village: urging to hold elections
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...