×

பெரும்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே யானை தாக்கி மூதாட்டி பலியானார். அவரது மகளுக்கு கால் முறிவு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே பெரியூர் ஊராட்சி, நல்லூர்காடுவளவு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மனைவி ராஜாத்தி (42). இவர்கள் மற்றும் ராஜாத்தியின் தாயார் மாலையம்மாள் (65) ஆகிய 3 பேரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கவுச்சிகொம்பிலிருந்து நல்லூர்காடுக்கு காட்டுப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது திடீரென செடி புதரில் இருந்து வந்த காட்டுயானை, மூவரையும் தாக்க துவங்கியது. யானை தாக்கியதில் மாலையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் யானை தாக்கியதில் ராஜாத்திக்கு கால் முறிவு ஏற்பட்டது. ராஜேந்திரன் உயிர் தப்பினார். தகவலறிந்து தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ மகாராஜன், கொடைக்கானல் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், பெரியூர் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்த ராஜாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கே.சி.பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். யானைகள் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

தொடரும் உயிர் பலி சோகம்

பெரும்பாறை சுற்றுவட்டார கிராம மக்கள் கூறுகையில், ‘‘திண்டுக்கல்லை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன்தான் வனத்துறை அமைச்சராக உள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், தாண்டிக்குடி, பெரும்பாறை மலைப்பகுதிகளில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டு உயிர்சேதத்தை ஏற்படுத்துவதுடன் விளைபொருட்களையும் நாசப்படுத்தியும் வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு இப்பணி முடிந்ததாக நினைக்கின்றனர். ஆனால் இதற்கு பின்னால் பொதுமக்கள், விவசாயிகளின் உள்ள பாதிப்பை அமைச்சர் உணரவேண்டும். யானையை விரட்ட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Elephant attacks , Elephant
× RELATED கொடைக்கானலில் 2 பெண்களை யானை...