×

பாபர் ஆஸம் 119*, ஆசாத் ஷபிக் 157* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரன் குவிப்பு

பெர்த்: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் (3 நாள்), பாகிஸ்தான் லெவன் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதும் பாகிஸ்தான் லெவன் அணி டாசில் வென்று பேட் செய்ய முடிவு செய்தது.

தொடக்க வீரர்கள் ஷான் மசூத் 22 ரன், கேப்டன் அசார் அலி 11 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ஹரிஸ் சோகைல் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் லெவன் 60 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஆசாத் ஷபிக் - பாபர் ஆஸம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஆஸி. பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் லெவன் 3 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்துள்ளது. ஆசாத் ஷபிக் 119 ரன் (245 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), பாபர் ஆஸம் 157 ரன்னுடன் (197 பந்து, 24 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.


Tags : Azad Shafiq 157 ,Babar Azam 119 ,training match ,Pakistan , Babar Azam, Azad Shafiq, Pakistan
× RELATED மெக்டெர்மாட், வைல்டர்மத் அபார சதம்: பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது