தேசிய போலீஸ் நினைவு தினம்,..வீர மரணமடைந்த போலீசாருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை

புதுடெல்லி: தேசிய போலீஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள போலீஸ் நினைவிடத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
சீன ராணுவம் கடந்த, 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, லடாக் எல்லையில் அத்துமீறி  நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக  ஒவ்வொரு ஆண்டும் அக்.21ம் தேதி, தேசிய போலீஸ் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் 292 போலீசார் பணியின் போது வீரமரணம் அடைந்துள்ளனர். தீவிரவாத ஒழிப்பு பணியில் மட்டும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 67 பேர் உயிர் தியாகம்  செய்துள்ளனர்.  

வீர மரணம் அடைந்த போலீசாருக்கு, டெல்லி சாணக்யாபுரியில் 6,12 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடம் மற்றும் மியூசியத்தை பிரதமர் மோடி கடந்தாண்டு இதே தினத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘போலீஸ் நினைவு தினத்தில், பணியின்போது உயிர்நீத்த காவலர்களை பெருமையுடன் நினைவு கூறுகிறேன். தைரியத்துடனும், ஊக்கத்துடனும் போலீசார் தங்கள் கடமையை செய்வது நம்மை எப்போதும் ஊக்குவிக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தை  உறுதி செய்யவும், நல்ல பணிச் சூழலை உருவாக்கவும், மத்திய  இன்னும் பல  பணிகளை மேற்கொள்ளும்’’ என்றார்.

பைலட்டுக்கு பாராட்டு
மும்பையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில், இந்தியாவில் சிறிய ரக விமானத்தை தயாரிப்பது குறித்து அமோல் யாதவ் என்ற பைலட் விளக்கினார். இந்த முயற்சிக்கு தடையாக இருந்த விஷயங்களை எல்லாம் அவர் பிரதமர் அலுவலகம் மூலம் நீக்கினார். இவரை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். இவர் தயாரித்த ஒற்றை இன்ஜின் விமான படத்தையும் சமூக இணையதளத்தில் மோடி வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, இந்தோனேஷியாவில் 2வது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள ஜோகோ விடோடோவுக்கு டிவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,National Police Commemoration ,Amit Shah , National Police Memorial Day, Police, Prime Minister Modi, Amit Shah
× RELATED தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட...