×

கல்கி ஆசிரமத்தில் 3வது நாளாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் ரூ.500 கோடி வருமான ஆவணங்கள், 1271 கேரட் வைர கற்கள் பறிமுதல்

சென்னை: கல்கி ஆசிரமத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரிசோதனையில் இதுவரை 44 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 18 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கத்தையும் வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. ஆந்திர மாநிலம் வருதையர்பாளையத்தில் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் கல்கி ஆசிரமம் அமைந்துள்ளது. கல்கி ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக நன்கொடை என்ற பெயரில் பணம் வருவதாக புகார் எழுந்தது. அதேநேரம் அந்த பணத்தை வெளிநாட்டு பக்தர்கள் பெயர்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் தகவல் வெளியாகி இருந்தது. இதுதவிர சுவிஸ் வங்கியில் கல்கி ஆசிரம நிர்வாகிகள் பெயர்களில் பல ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சுவிஸ் வங்கியிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அந்த நாடு கொடுத்தது.

அதில் கல்கி ஆசிரம நிர்வாகிகள் பெயர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அதில், ஆசிரமம் செயல்படும் இடத்தில் மட்டும் ரூ.26 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில், 1,271 கேரட் வைர கற்கள், ரூ.500 கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துக்களும் அது தொடர்பான ஆவணங்களும் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரிஏய்ப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் ரூ.1000 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை போலீசார் சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆசிரமம் கடந்த 20 வருடங்களாக நடத்தப்பட்டு வருவதால், சில அறக்கட்டளைகள் மூலம் பெறப்படும் நிதி மற்றும் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை ஆகியவற்றை கொண்டு வெளிநாடுகளில் தொழில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனையில் கல்கி ஆசிரமத்திற்கு பக்தர்கள் கொடுத்த நன்கொடையில் ரியல் எஸ்டேட் தொழில் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி என்ற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணன், ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்து வந்துள்ளார். சென்னை அருகே ஆந்திராவில் உள்ள தடா மற்றும் வேலூரில் 1,000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, விஜயகுமார் நாயுடுவின் மகன் கிருஷ்ணா, அவரது மனைவி, ஆசிரமத்தின் சிஇஓ லோகேஷ் ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : raid ,Kalki Ashram. , Kalki Ashram, income test, money, diamonds, documents, confiscation
× RELATED ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல்...