×

நெல்லை பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது: முக்கிய இடங்களில் அறிவிப்பு பேனர்

நெல்லை: சந்திப்பு பஸ் நிலைய கட்டிடப்பணிகள் விரைவுபடுத்தப்படுவதால் நெல்லை பொருட்காட்சி மைதான தற்காலிக பஸ் நிலையம் இன்று பகல் 11 மணி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணி மந்தநிலையில் நடைபெற்று வந்தது. இதனை விரைவுபடுத்துவதற்காக பஸ்நிலைய வெளிப்புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ் நிலையம் தற்போது பொருட்காட்சி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையம் இன்று முதல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சந்திப்பு பஸ் நிலைய பகுதிக்கே நகர பஸ்கள் வந்தன. டவுன், பாளை மார்க்கமாக செல்லும் பஸ்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்ட வெளிப்பகுதியில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக ராஜா பில்டிங் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தன. காலை 10.30 மணிக்கு மேல் பொருட்காட்சி மைதானத்தில் பஸ் நிலையம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  பகல் 11 மணி முதல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்தன. அங்கு மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, உதவி ஆணையர் சாந்தி மற்றும் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள், தனியார் பஸ் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டடோர் பஸ்கள் வந்து செல்வதை கண்காணித்தனர்.

பஸ்கள் அங்குள்ள நெல்லை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் வழியாக சென்று உள்ளே தனித்தனி இடங்களில் நிறுத்தப்படுகின்றன. பின்னர். பொருட்காட்சி மைதான பிரதான நுழைவு வாயில் வழியாக வெளியே வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவின்குமார்அபிநவ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சரவணன் (சட்டம் ஒழுங்கு), மகேஷ்குமார் (போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு), உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் போக்குவரத்து போலீசார் கண்காணித்தனர். மேலும் மைக் மூலம் பொதுமக்களுக்கு போக்குவரத்து மாற்றம் குறித்த தகவல்களை தெரிவித்தபடி இருந்தனர். இதனிடையே இன்று அதிகாலை மழை பெய்ததால் அரவிந்த் மருத்துவமனை அருகே மற்றும் தேவர் சிலை அருகே கைலாசபுரம் திருப்பம் பகுதியில் நகர பஸ்கள் நிற்பதற்காக தொடங்கப்பட்ட சாலை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்டது.


Tags : bus station ,Paddy Museum ,areas , Paddy, Museum, Temporary Bus Stand
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்