×

சீன தலைவர்கள் எங்கு சென்றாலும் திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவது ஏன்?

திபெத் மீது தற்போது சீனா ஆதிக்கம் செலுத்தினாலும் அதனை முதலில் கைப்பற்றியது ஆங்கிலேயே அரசு தான். வழக்கம் போல் வணிகர்கள் என்ற போர்வையில் நுழைந்த இங்கிலாந்து அரசு படைகள் சிறிது சிறிதாக முன்னேறி 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி திபெத் தலைநகர் லாஸாவை கைப்பற்றினர். அப்போது திபெத்தை ஆண்டு கொண்டிருந்த 13-வது தலாய் லாமா, மங்கோலியாவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் பிரிட்டன் அரசுடன் சமரசம் ஏற்பட்டு 1909-ல் 13-வது தலாய் லாமா திரும்பி வந்து ஆட்சி நடத்தினார்.

1933-ம் ஆண்டு அவர் இறந்ததை அடுத்து சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன. 1949-ம் ஆண்டு செப்டம்பரில் சீன புரட்சி வெற்றி பெற்று வந்த வேளையில் கம்யூனிஸ்ட் படை திபெத்தை கைப்பற்றியது. 1950-ம் ஆண்டில் தான் சீனா ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தில் போராட்டங்கள் வெடித்தன. மெல்ல மெல்ல வெடித்த போராட்டங்கள் 1959-ம் ஆண்டு தொடக்கத்தில் திபெத் முழுவதும் வெடித்தது.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சீனப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து அதே ஆண்டில் இரவோடு இரவாக தப்பிச்சென்ற 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருடன் வந்த ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் குடும்பங்களுடன் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். ஜவகர்லால் நேரு தலைமையிலான அரசு தலாய் லாமாவுக்கும், புலம் பெயர்ந்த திபெத்தியர்களுக்கும் அடைக்கலம் அளித்தது.

இந்தியாவில் உள்ள முகாம்களில் தற்போது ஒன்றரை லட்சம் திபெத்தியர்கள் தற்காலிக குடியுரிமை பெற்று வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகம், தமிழ்நாடு, ஆகிய மாநிலங்களில் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் தான் சீன அரசியல் தலைவர்கள் எங்கு சென்றாலும் அங்கு திரளும் திபெத்தியர்கள் திபெத்திற்கு தன்னாட்சி வழங்க வலியுறுத்தி ஆவேசமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

Tags : Tibetans ,leaders ,Chinese ,protest , Chinese leaders, Tibetans, protest
× RELATED சொல்லிட்டாங்க...