×

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை: சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான  இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூவைத்தேடி வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, கிராமத்துமேடு உள்ளிட்ட இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி  பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : districts ,Tamil Nadu ,Chennai ,Thundershowers ,Meteorological Department , Heavy rains in Tamil Nadu today and tomorrow: Moderate rain in Chennai: Meteorological Department
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...