×

இன்று (செப்.21) உலக மறதி தினம் : அடடா... அதை மறந்திட்டேனே...

ஒரு கடைக்கு போவோம். வீட்டுல மொத்தமே 2 சாமான்தான் வாங்கிட்டு வரச்சொல்லியிருப்பாங்க.... ஒண்ணை வாங்கிட்டு, ஒரு சாமானை வாங்காமலே வந்திருவோம். திருப்பி கடைக்கு போகணும். இதுகூட பரவாயில்லை. வாங்கப் போனதையே மறந்திட்டு வேற வேலை பார்க்க போறவங்களும் இருக்காங்க... சிலர் தனது நெருங்கிய உறவுகள் பெயரையே தவறாக குறிப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் செப்.21ம் தேதி அனுசரிக்கப்படுவதே ‘உலக மறதி நோய் தினம்’. அதாவது, World Alzheimer’s Day.

அதென்ன அல்சைமர் (Alzheimer) என்பதை பார்ப்போமா?

அல்சைமர் என்பது வயதானவர்களுக்கு வரும் `டிமென்ஷியா’ என்கிற ஒரு ஞாபக மறதி நோய். இந்த பாதிப்பு உள்ளவர்களில் சுமார் 65 - 75 சதவீதம் பேர் அல்சைமர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இது எப்படி வருகிறது? வயதாகும்போது நமது மூளையின் செல்கள் மெல்ல மெல்ல சிதைக்கப்படும். இதன்மூலம் ஞாபக சக்தி குறைந்து நமது பெயரை கூட, யாராவது கேட்டால் டக்கென்று சொல்ல வராது. பெரும்பாலும் இது 60 - 65 வயதை தாண்டியவர்களுக்கே ஏற்படக்கூடிய நோய்.

1906ல் ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் அலோயிஸ், அல்சைமர் நோய் குறித்து உலகுக்கு தெளிவாக விளக்கினார். அதன்பிறகே வயதான பிறகு தோன்றும் மறதி நோயை, ‘அல்சைமர்’ என அழைத்தனர். ஒரு பொருளை 5 நிமிடம் முன்புதான் வைத்திருப்பார்கள். ஆனால், எங்கே வைத்தோம் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் பெயர் கூட மறந்து போகும். பிறந்த தேதி, திருமண நாள் உள்ளிட்ட முக்கிய தினங்கள் கூட நினைவுக்கு வராது.

இந்நோயால் மூளை உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் இந்த நோய் ஆறாவது இடம் பிடித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அல்சைமர் நோய் எதனால் ஏற்படுகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மறதியை விட மிக முக்கியமானது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குணநலன்கள் கூட மாறிப்போகும். அதற்காக பயப்பட தேவையில்லை. அதற்குரிய சிறப்பு டாக்டர்களை பார்த்து, உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் மறதியின் தாக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

அவர்கள் குழந்தைகள்...

பெரும்பாலும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு குழந்தைகள் போலத்தான் கருத வேண்டும். அவர்களுக்கு அதை நோய் என உணர்த்தாமல், அன்போடு நடந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் நெருங்கிய உறவாக இருந்தாலும், தனது பெயரை அறிமுகப்படுத்தியே பேச வேண்டும். கூடுமானவரை, அவர்களை நீண்ட நேரம் சிந்திக்கும்படியான நினைவுகளை பேசக்கூடாது. சில விஷயங்களை குறிப்பால் உணர்த்தலாம். முடிந்தவரை அவர்களை தனிமையில் விடாமல் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களை புறந்தள்ளக்கூடாது. இளம் வயது மறதி சில நேரங்களில் அலட்சியத்தால் ஏற்படுவது. அதையும், இதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.

Tags : World Oblivion Day , September 21,Oblivion Day,World Oblivion Day
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...