×

பொருளாதார சரிவை தடுக்க மீண்டும் நடவடிக்கை நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு: 1.5 லட்சம் கோடி அளவுக்கு வரி குறைப்பு

* நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை தடுக்க, மத்திய அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிகள் குறைக்கப்பட்டு, ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். மத்தியில் 2014ல் பாஜ அரசு அமைந்த பிறகு அடுத்தடுத்து எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் இன்னும் மீளவில்லை. தற்போது, 2வது முறையாக இக்கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்து விட்டனர். கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து, விடுமுறைகளை அறிவித்து வருகின்றன. நூற்றுக்கணக்கான கார் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. இதுபோல், பல்வேறு தொழில்துறைகள், சிறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், பல லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பறிபோனது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதனால், நாடு முழுவதும் பண புழக்கமின்றி, உற்பத்திகளும், விற்பனைகளும் குறைந்து பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்ததற்கும் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகத்தான் உள்ளது. அதாவது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க, இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொருளாதாரம் படுமோசமான நிலையை எட்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுறுத்தினார்.

இந்த பொருளாதார பின்னடைவை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, பொருளாதார மந்தநிலையை தடுப்பதற்காக மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள வரிச் சலுகைகளை அதிரடியாக அறிவித்தார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

* உள்நாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 25 சதவீதமாக இருந்த நிறுவன வரி, தற்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் நடப்பு நிதியாண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே அமலுக்கு வருகிறது.
* மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக, புதிதாக தொழில் தொடங்கும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 15 சதவீத வரி அமல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு புதிதாக முதலீடு செய்து துவக்கப்படும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். அதோடு, உற்பத்தியை 2023 மார்ச் 1ம் தேதிக்குள் துவக்க வேண்டும்.
* பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பங்குகளை திரும்ப வாங்குவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 5ம் தேதிக்கு முன்பு (பட்ஜெட்டுக்கு முன்பு) அறிவித்து இருந்தால் அல்லது வாங்கி இருந்தால் இதற்கான கூடுதல் வரியை செலுத்த தேவையில்லை.
* நிறுவனங்கள் தங்களின் சமூக பொறுப்பு நிதியான 2 சதவீதத்தை, மத்திய அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் புதுமையான தொழில் தொடங்க உதவக்கூடிய இன்குபேட்டர் அமைப்புகளுக்கு நிதியாக வழங்கலாம். அல்லது ஐஐடி மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
* இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ராகுல் வியப்பு:
வரிச்சலுகை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள  டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி தனது ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சிக்காக இப்படி கூட பங்குச்சந்தையை உயர்த்த தயாராகி விட்டார் என்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. ஹூஸ்டனில் நடக்கும் அந்த  நிகழ்ச்சிக்காக ரூ.1.4 லட்சம் கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதுதான், உலகிலேயே மிக அதிக செலவில் நடக்கும் நிகழ்ச்சி. ஆனாலும், எந்த நிகழ்ச்சியாலும் ‘ஹவுடி மோடி’ உருவாக்கிய பொருளாதார குழப்பத்தை மறைத்து விட முடியாது,’ என விமர்சித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்கது:
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘நிறுவனங்களுக்கான வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இது, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிப்பதுடன், உலகம் முழுவதும் இருந்து தனியார் முதலீட்டை ஈர்க்கச் செய்யும். நாட்டின் தனியார் துறையில் போட்டியை ஏற்படுத்தி, அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி, 130 கோடி இந்தியர்களுக்கும் வெற்றிகரமான பலனை அளிக்கும்,’ என கூறியுள்ளார்.

‘நம்பிக்கையை சீர்குலைக்கும்’:
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘இந்த வரி குறைப்பும், அரசு எடுத்துள்ள ஒழுங்கற்ற முடிவுகளும்  பங்கு சந்தையை வேண்டுமானால் உயர்த்தலாமே தவிர, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைப்பதோடு, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கிவிடும்,’ என கூறப்பட்டுள்ளது.

1.45 லட்சம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்:
புதிய வரிச் சலுகைகளை அறிவித்த பிறகு நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘இந்த வரிச்சலுகைகள் அனைத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீடு அதிகரிக்கவும் உதவும். இந்த சலுகைகளால் அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்,’’ என்றார்.

Tags : downturn , Nirmala Sitharaman, Minister of Finance, Taxation and Finance
× RELATED மகாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத...