×

உப்பூர் அனல்மின் நிலையம் மற்றும் பாலம் அமைக்க கடும் எதிர்ப்பு: படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்

ராமநாதபுரம்: உப்பூர் அனல்மின் நிலையம் மற்றும் பாலம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உப்பூர் பகுதியில் அரசு சார்பில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அனல்மின் நிலையத்திற்கு கடல் நீரை குழாய் மூலம் கொண்டுவந்து அதை பயன்படுத்திய பின் சுத்திகரித்து மீண்டும் கடலில் விடும் வகையில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த அனல்மின் நிலையம் மற்றும் பாலத்தால் தங்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், கடலில் சுடு தண்ணீரை மீண்டும் கலக்கச்செய்வதால் மீன் வளம் அழியும் எனவும் அப்பகுதி மீனவர்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவ்விகாரம் தொடர்பாக முந்தைய ஆட்சியர் நடராஜன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் மற்றும் மீனவர்கள், அனல்மின் நிலையம் மற்றும் பாலம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த செயலிலும் அரசாங்கம் ஈடுபடாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், ஒருபுறம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் ஒப்பந்ததாரர்கள் மூலம் அனல்மின் நிலையம் மற்றும் பாலம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனால் ஆத்திரமடைந்துள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பூர், காரங்காடு, புதுப்பட்டினம், சிங்கார வேலன், காசிப்பட்டினம், தேவிப்பட்டினம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உப்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்புக்கொடியை கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனல்மின் நிலைய பணிகள் நடைபெறும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கடலை நம்பி உள்ள சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்கள் இத்திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படுவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : protest ,station ,bridge ,fishermen ,Ramanathapuram ,power station ,Uppur Anal , Uppur, Thermal Power Station, Bridge, Ramanathapuram, Fishermen, Struggle
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!