காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது... இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

ஜெனிவா: காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவை குறைத்து கொண்டது. மேலும் எல்லை அருகே உள்ள இந்திய ராணுவ நிலை மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவது, காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  

இந்த விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை, பாக்., நாடியது. இது முழுக்க முழுக்க, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில் நடைபெற்ற ஜி - 7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐ.நா., தலைவர், ஆன்டனியோ குட்ரெஸ் பேசினார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாமெஹ்மூத் குரேஷியுடனும் அவர் பேச்சு நடத்தினார். மேலும், பாகிஸ்தானிற்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதி, மலீஹா லோதியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அவருடனும் குட்ரெஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், காஷ்மீர் விவாகரத்தில் தலையிடமுடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா சபை பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் மீது நம்பிக்கை உள்ளது என்றார். இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட முடியாது என்ற கூறிய அவர், இரு நாடுகளுமே பிரச்சனையை பேசி தீர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலாரின் தலைமை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழல் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags : UN ,Kashmir ,Secretary-General ,talks ,Pakistan ,India , Kashmir, India, Pakistan, talks, UN Secretary General
× RELATED காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய...