ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி வந்தது

டெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நடராஜர் சிலையை சென்னை கொண்டு வர உள்ளார். சுபாஷ் கபூர் என்கிற கடத்தல் மன்னனால் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 37 ஆண்டுக்கு முன் நெல்லை மாவட்ட கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் கருவறை கதவை உடைத்து சிலை திருடப்பட்டது.

நடராஜர் சிலையுடன் சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகளும் 1982 ஜூலையில் கொள்ளையடிக்கப்பட்டன. கடத்தப்பட்ட நடராஜர் சிலை வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. துப்பு துலக்க முடியாமல் 1984ல் மூடப்பட்ட வழக்கை டி.எஸ்.பி மலைச்சாமி மீண்டும் புலனாய்வு செய்து சிலைகளை கண்டுபிடித்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஏ.ஜி.எஸ்.ஏ கேலரியில் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோயில் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது. ஏ.ஜி.எஸ்.ஏ கேலரி பதிவாளர் ஜேன் ராபின்சன் நிதியுதவியுடன் விமானம் மூலம் நடராஜர் சிலை டெல்லி கொண்டு வரப்பட்டது. 700 ஆண்டு தொன்மையான நடராஜர் சிலையின் இன்றைய மதிப்பு ரூ.30 கோடியாகும்.

செப்.13-ல் சென்னை வருகிறது நடராஜர் சிலை:

ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டுள்ள நடராஜர் சிலை சென்னைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட உள்ளது. டெல்லியில் இருந்து 11-ம் தேதி புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் மூலம் நடராஜர் சிலை சென்னைக்கு கொண்டு வரப்படும்.

Tags : Australia ,Delhi , Statue of Natarajar, Australia
× RELATED ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட...