224 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆப்கன்

தாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான்  அணி 224 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன், வங்கதேசம் 205 ரன் எடுத்தன. இதைத் தொடர்ந்து, 398 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய  வங்கதேசம், 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 39, சவும்யா சர்க்கார் (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷாகிப் 44 ரன் (54 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஜாகிர் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸசாய் வசம் பிடிபட்டார். மெகதி ஹசன்  மிராஸ் 12 ரன், தைஜுல் இஸ்லாம் (0), சர்க்கார் 15 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் மூழ்க, வங்கதேச அணி 173 ரன்னுக்கு சுருண்டது (61.4 ஓவர்). நயீன் ஹசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ரஷித் கான் 21.4 ஓவரில் 6 மெய்டன் உட்பட 49 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஜாகிர் கான் 3, முகமது நபி 1 விக்கெட் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் அணி 224 ரன் வித்தியாசத்தில் வென்று  டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது வெற்றியைப் பதிவு செய்தது.2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் வீழ்த்திய ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆப்கன் வீரர் முகமது நபிக்கு அந்த விருதை ரஷித் கான் அர்ப்பணித்தார். முகமது நபி (34  வயது) 3 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி 33 ரன் மற்றும் 8 விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Afghanistan ,Bangladesh , Afghanistan, beat, Bangladesh
× RELATED ஆப்கானிஸ்தானின் பெண்கள் படை!