யுஎஸ் ஓபனில் மெட்வதேவ் போராட்டம் வீண் நான்காவது முறையாக ரபேல் நடால் சாம்பியன்: 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 4வது முறையாக பட்டம் வென்று அசத்தினார்.ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபனில், பரபரப்பான ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் (23 வயது, 5வது ரேங்க்) நடால் மோதினா. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருந்த இப்போட்டியில் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய நடால் முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3 என வென்று 2-0 என முன்னிலையை அதிகரித்துக் கொண்டார்.எனினும், முழு திறமையையும் வெளிப்படுத்தி கடும் நெருக்கடி கொடுத்த மெட்வதேவ் 7-5, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது. இளம் வீரர் மெட்வதேவுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஆரவாரம்  செய்து கூக்குரலிட 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் தங்களின் சர்வீஸ் ஆட்டங்களில் புள்ளிகளைக் குவித்து முன்னேறினர்.

4 மணி, 50 நிமிடத்துக்கு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் அனுபவ வீரரான நடால் கடைசி கட்டத்தில் பதற்றமின்றி விளையாடி மெட்வதேவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து வெற்றியை வசப்படுத்தினார். அவர் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என 5  செட்களில் போராடி வென்று யுஎஸ் ஓபனில் 4வது முறையாக கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கடைசி வரை போராடி 2வது இடம் பிடித்த மெட்வதேவ் ரசிகர்களின் பாராட்டுகளை  அள்ளினார்.மெர்டன்ஸ் - சபலென்கா அசத்தல்: மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் - அரினா சபலென்கா (பெலாரஸ்) இணை 7-5, 7-5 என்ற நேர் செட்களில் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) -  ஆச்லி பார்தி (ஆஸ்திரேலியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


Tags : Medvedev ,US Open , Medvedev, US Open, fourth time, Rafael Nadal
× RELATED அதிபர் புடினிடம் தனது ராஜினாமா...