×

மனிதர்களுக்கு மட்டுமின்றி பிளாஸ்டிக்கால் கால்நடைகளுக்கு கேடு: கால்நடை பராமரிப்பு முன்னாள் இயக்குநர் விளக்கம்

நத்தம்: மனிதர்களுக்கு மட்டுமின்றி பிளாஸ்டிக்கால் கால்நடைகளுக்கும் கேடுதான் என கால்நடை பராமரிப்பு முன்னாள் இயக்குனர் விளக்கமளித்தார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கால்நடைகள் பொதுவாக காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிடுகின்றன. ஏனென்றால் தீவனங்களைப் பகுத்தறியும் தலைமையும் சுவையை உணரும் குணமும் அவைகளுக்கு கிடையாது. பிளாஸ்டிக் பொருட்களால் கால்நடைகளுக்கு ஏற்படும் உடல்நலக்கேடு பற்றி திண்டுக்கல் கால்நடை பராமரிப்பு முன்னாள் இணை இயக்குநர் வி.ராஜேந்திரம் விளக்கமளித்தாவது: கால்நடைகள் மேய்ச்சலின்போது தலையை கீழே தாழ்த்தி தரையில் மேய்வதால் புல் மற்றும் தீவனங்களோடு சேர்த்து காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேர்த்து சாப்பிட வாய்ப்புகள் உள்ளன.“

நகரமயமாக்குதல் எனும் கொள்கைப்படி தற்போது மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. இதனால் பசுந்தீவனங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. கட்டிடங்களின் உபரிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் வீசி எறிவதால் மாடுகளுக்கு அவை தீவனமாகின்றன.பிளாஸ்டிக் பொருட்கள் கால்நடைகளின் வயிற்றில் அடைப்பையும், செரிமானம் ஆகாத தன்மையையும் ஏற்படுத்துகின்றன. நாள்பட இவை மலச்சிக்கலையும் உண்டாக்குகின்றன. பாலின் அளவில் குறைபாடு மற்றும் பாலில் கொழுப்புச்சத்து குறைபாடும் தவிர்க்க இயலாதது. வயிறு உப்புசம், உதாரவிதானம் இறக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற சுகாதார கேடுகளும், புற்று நோய்க் கட்டிகளையும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்துகின்றன.
பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் சாப்பிடும்போது வயிறு நிறைவை ஏற்படுத்துவதால் நாளடைவில் தீவனம் எடுப்பதில் அவ்வளவாக நாட்டம் இருக்காது. இதனால் சத்து குறைபாடு உண்டாகும். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியின் போது உயர்ரக தாதுக்கள் கலக்கப்படுவதால் அவை கால்நடைகளின் வயிற்றில் சிதைக்கப்பட்டு தீங்கு விளைவிக்கின்றன.

கால்நடைகள் இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். வீட்டின் கழிவுக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து குப்பை தொட்டிகளில் சேர்க்க வேண்டும். சாலை ஓரங்களில் குப்பைகளில் கால்நடைகளை மேயவிடக் கூடாது. சரியான அளவு அடர்தீவனம், பசுந்தீவனம், வைக்கோல் போன்றவற்றை எல்லாக் காலங்களிலும் கொடுக்க வேண்டும். குப்பைக் கூளங்கள் கொட்டப்பட்ட நிலங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. மாடுகளுக்கு அடர் தீவனம் தரும்பொழுது காந்தத்தைக் கொண்டு பரிசோதித்து இரும்பு துகள்களை அகற்றி பின்னர் கொடுப்பது நல்லது. இதுபோன்ற பராமரிப்பு முறைகளினால் தீவனங்களில் உபயோகித்த பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து விடாமல் அவற்றை அப்புறப்படுத்தி வழுங்குவதால் கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீமை ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு கூறினார்.

Tags : Plastic ,livestock, , humans,Former Director , Livestock Explanation
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...