உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் நஸோமியை வீழ்த்தி சிந்து வரலாற்று சாதனை: 5வது பதக்கம் வென்று அசத்தல்

பாசெல்:  உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜப்பானின் நஸோமி ஓகுஹராவை வீழ்த்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5வது பதக்கத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பி.வி.சிந்து (24 வயது, 5வது ரேங்க்) - நஸோமி ஓகுஹரா (24 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதினர். கடந்த 2 ஆண்டுகளிலும் இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்திருந்த சிந்து, இம்முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார்.

அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓகுஹரா ஸ்தம்பித்து நிற்க, முதல் செட்டை 21-7 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அவர் 21-7, 21-7 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 38 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து மழை...
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ள சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அம்மாவுக்கு பிறந்த நாள் பரிசு!
உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற தங்கப் பதக்கத்தை தனது அம்மாவின் பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிப்பதாக சிந்து அறிவித்துள்ளார். சாதனை வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தது. மூன்றாவது முயற்சியில் வெற்றியை வசப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது தாய்க்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். பயிற்சியாளர்கள் கோபிசந்த், கிம் ஜி ஹியுன் இருவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்’ என்றார்.

* உலக சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த சிந்து, இம்முறை தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு வரலாற்று சிறப்புமிக்க சாதனையை பதிவு செய்தார். உலக பேட்மின்டன் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
* உலக பேட்மின்டனில் 5 பதக்கம் வென்ற 2வது வீராங்கனை என்ற சாதனையும் சிந்து வசமாகி உள்ளது.
* உலக தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 வகை பதக்கங்களையும் வென்ற 3வது வீராங்கனை என்ற பெருமையும் சிந்துவுக்கு கிடைத்துள்ளது.Tags : Sindhu wins,5th medal,World Badminton,Championship Final
× RELATED ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி:...