×

கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர்கள் 2 பேர் கைது!: 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு..!!

கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் இருக்கிறது. அந்தப் படிப்பகம் முன்பு பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று முழு ஊரடங்கை பயன்படுத்தி பெரியார் சிலைமீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், தலை பகுதியில் காவி நிறப் பொடி தூவியும் அவமதிப்பு செய்தனர். இதைக் கண்ட பொதுமக்கள், பெரியார் படிப்பகத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு திரண்ட திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமதனம் திட்டமிட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெரியார் திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போத்தனூர் போலீசார், வெள்ளளூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் அருண் கார்த்திக், மோகன் ராஜை கைது செய்தனர். அவர்கள் வெள்ளலூரில் அந்த அமைப்பின் வார்டு பொறுப்பாளர்களாக உள்ளனர். இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 15 நாட்கள் சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார்.

Tags : Hindu Front ,Periyar ,Coimbatore , Coimbatore, Periyar statue, Hindu Front supporters, arrested
× RELATED அவதூறு பேச்சு இந்து முன்னணி எஸ்பியிடம் புகார்