வங்கி மோசடிகள் பட்டியல் தயாராகிறது

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் குறித்து பட்டியல் எடுத்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான மத்திய விஜிலென்ஸ் கமிஷன், அரசு துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரும். அதன் பேரில் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த அரசு உத்தரவிடும்.   வங்கிகளில் வராக்கடன் மோசடிகள் ஏராளமாக உள்ளன. இதுபற்றி இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது இது பற்றி தீவிரமாக ஆராய மத்திய அரசு  முடிவு எடுத்துள்ளது.

மத்திய அரசின் விஜிலென்ஸ் கமிஷனில் நான்கு உறுப்பினர் கொண்ட உயர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ள நிதி மோசடிகள் குறித்து வங்கிகள், உடனடியாக கமிஷனுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையின்பேரில் நான்கு பேர் உயர் குழு உரிய ஆய்வு நடத்தி, இந்த மோசடி குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை என்று பிரித்து விசாரணைக்கு அனுப்பும்.   வங்கி மோசடிகளை விசாரிக்க ஏற்கனவே ரிசர்வ் வங்கி ஆலோசனையின் பேரில் ஒரு  குழு இருந்தது. இதை விஜிலென்ஸ் கமிஷன் மாற்றி அமைத்து நான்கு பேர் குழுவை  அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியில் நடந்துள்ள 500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகள் குறித்து கமிஷனுக்கு அனுப்பலாம் என்று வங்கிகளுக்கு விஜிலென்ஸ் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Preparing,bank fraud ,list
× RELATED 18 பொதுத்துறை வங்கிகளில் 1.17 லட்சம் கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்