தொழிலதிபரின் கார் மோதியதில் சாலையோரம் தூங்கிய நபர் பலி

சென்னை: நீலாங்கரையை சேர்ந்தவர் சத்யநாராயணன் (58), தொழிலதிபர். இவர், தி.நகரில் வசிக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றபோது, வீட்டின் முன்பு சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர், சாலையோரம் படுத்திருந்தார். இதை சத்யநாராயணன் கவனிக்காததால், கார் அவர் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து இறந்தவர் யார்? என விசாரிக்கின்றனர். இதனிடையே, சத்யநாராயணனை கைது செய்து, அவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
* கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு பைக் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இச்சிறுவன் மீது ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
* கோயம்பேடு பெரியார் நகர் காந்தி தெருவை சேர்ந்த ஆதாம் (26) என்பவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் குளியல் அறையில், தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
* கே.கே.நகர் 14வது செக்டார் பகுதியில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி விற்ற சாலிகிராமம் எம்ஜிஆர் சாலையை சேர்ந்த மஸ்தான் கனி (44), கே.கே.நகரை சேர்ந்த சதாம் உசேன் (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
* தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், ரங்கநாதபுரம் பிரதான சாலையை சேர்ந்த ஹரிகுமார் (21) என்ற கல்லூரி மாணவன், கடந்த 20ம் தேதி காலை பெருங்களத்தூர் அருகே பைக்கில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தார். பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிகுமார், நேற்று முன்தினம் இறந்தார்.
* ஆதம்பாக்கத்தில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (39), நேப்பியர் பாலம் அருகில் கஞ்சா விற்ற மதுரை ஜீவா நகர் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த விஜி (29), புழல் காவாங்கரை சிக்னல் அருகே கஞ்சா விற்ற  அண்ணாநகர் நேரு தெருவை சேர்ந்த பவித்ரன் (21), வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே கஞ்சா விற்ற பழையவண்ணாரப்பேட்டை கீரைத் தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* நீலாங்கரை, சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் 45 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டில் வசிக்கும் குப்பன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Businessman,killed, road,accident
× RELATED 2018ம் ஆண்டு ,254 பேர் பலி நடைபாதை...