அடுத்தடுத்து நேர்ந்த விபத்துகளால் உத்தரகண்ட் மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை ரத்து

உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு உள்ளான உத்தரகாசியில் அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாசி டி.எம் ஆஷிஷ் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. வெள்ளம், இடிபாடுகள், நிலச்சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த புதைக்கிழமையன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியபோது உத்தரகாசி என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டருக்குள் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நேற்று மேலும் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டத்தின் அரகோட் பகுதிக்கு நேற்று நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஹெலிகாப்டர் டிக்கோச் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போது பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த ஒரு ஆற்றின் கரைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைலட், துணை பைலட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அடுத்தடுத்த நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்துகளை தொடர்ந்து, உத்தரகாசி மாவட்டத்திற்கு தற்காலிகமாக ஹெலிகாப்டர் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளிலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Tags : Uttarakhand, floods, helicopter, canceled, relief
× RELATED மின்சார ரயில்கள் ரத்து