×

தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு 7 இணை தலைவர்கள் நியமனம்: வக்கீல் பயிற்சி அகாடமி தொடங்க திட்டம்

சென்னை: தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அளித்த பேட்டி:  தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சிலின் பொதுக்குழு கூட்டம் கடந்த 17ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அகில இந்திய பார்கவுன்சிலின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சிலின் நிர்வாக வசதிக்காக மண்டல அளவில் 7 இணை தலைவர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.    அதன் அடிப்படையில், கோவை மண்டலத்திற்கு ஆர்.அருணாச்சலம், சென்னை மண்டலத்திற்கு ஜி.மோகனகிருஷ்ணன், கரூர் மண்டலத்திற்கு என்.மாரப்பன், மதுரை மண்டலத்திற்கு பி.அசோக், அரியலூர் மண்டலத்திற்கு கே.பாலு, திருவள்ளூர் மண்டலத்திற்கு சி.முருகா, சேலம் மண்டலத்திற்கு டி.சரவணன் ஆகியோர் இணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்கவுன்சில் செயல் தலைவராக ஜெ.பிரிசில்லா பாண்டியன் நிமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான குழுவில் பார்கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் உள்ளிட்ட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில்,  போலி சட்டக்கல்லூரிகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதியதாக சட்ட பயிற்சியகம் (அகாடமி) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீட்டு தொகையை  தவணை முறையில் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்வது குறித்து ஆராய மூத்த வழக்கறிஞர்கள்  குழு அமைக்கப்பட உள்ளது.
இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5000 உதவித்தொகை வழங்க கோரி முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Tamilnadu-Puducherry Park Council, Leaders Appointment, Advocate Training Academy
× RELATED ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா!:...