×

தான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே கைதியாக ப.சிதம்பரம்: டெல்லியில் புதிய சிபிஐ அலுவலகம் 2010-ல் திறப்பு..!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்ட சிபிஐ அலுவலகத்திலேயே அவர் கைதியாக இருப்பது தேசிய அளவில் பேசப்படும் பொருளாக உள்ளது. 2010-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ-யும் இருந்தது. அப்போது சிபிஐ-க்காக டெல்லியில் புதிய தலைமை அலுவலகத்தை கட்டி முடித்து பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து திறப்பு விழா நடத்தினார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் முன்னிலையில் திறப்பு விழா கண்ட டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரே கைதியாக இருக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார் ப.சிதம்பரம். இதனையடுத்து ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அதே அலுவலகத்திற்கு அழைத்து சென்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. இதனையடுத்து ப.சிதம்பரம் 5 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : CBI Office, Chidambaram
× RELATED பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்