கோவை மாவட்டத்தில் ‘விபத்தில்லா புதன்கிழமை’ போலீசார் புதிய முயற்சி

கோவை: கோவை மாவட்டத்தை விபத்தில்லா புதன்கிழமையாக மாற்ற போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் விபத்துகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உத்தரவின் பேரிலும், எஸ்பி சுஜித்குமார் மேற்பார்வையில் விபத்தில்லா புதன்கிழமை என்ற ‘நோ ஹெல்மட் நோ என்ட்ரி’ என்ற புதிய முயற்சியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தகவல் பலகை வைக்கப்படும். அதில், ‘நோ ஹெல்மட் நோ என்ட்ரி’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். யாராவது ஹெல்மட் அணியாமல் உள்ளே நுழையாதபடி போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். அதையும் மீறி சென்றால் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேட்டுப்பாளையம்-கோவை சாலை, ஏலூர் பிரிவு, நஞ்சேகவுண்டன்புதூர் பாலம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, செல்வபுரம் நகர எல்லை, கோவைபுதூர் ஜங்சன், ஆலந்துறை புதூர் சந்திப்பு, காரூண்யா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள், போளுவாம்பட்டி ரோடு, தொண்டாமுத்தூர் பகுதி, வடவள்ளி பகுதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதி, மகாலிங்கபுரம் பகுதிகள் ’நோ ஹெல்மட் நோ என்ட்ரி’ பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘‘விபத்தில்லா புதன்கிழமை என்ற புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

மேற்கூறிய அனைத்து பகுதிகளிலும் ‘நோ ஹெல்மட் நோ என்ட்ரி’ வாசகங்கள் அடங்கிய தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கமே விபத்தில்லா பயணத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். புதன்கிழமை மட்டுமல்லாமல் படிப்படியாக அனைத்து நாட்களிலும் இந்த முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று (புதன்கிழமை) தகவல் பலகை வைக்கப்பட்ட இடங்களில் விபத்துகள் நடைபெறவில்லை. இதேபோல் அனைத்து நாட்களும் அமையவேண்டும்’’. என்றார்.

Tags : Wednesday, No accident
× RELATED காரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்: வண்ணம் தீட்ட கோரிக்கை