×

கார்த்தி சிதம்பரம் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வருமானவரி வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கார்த்தி சிதம்பரம் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வருமானவரி வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.1.35 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதிக்கு எதிராக வருமான வரித்துறை 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு  வழக்கை மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்;, அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் இந்த வழக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிய அவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்; கார்த்தி சிதம்பரம் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வருமானவரி வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீதான சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு பதிவாளர் பதில் அளிக்கும் வரை தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகஸ்ட் 30-க்குள் பதிலளிக்க தமிழக அரசு, வருமான வரித்துறை, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Karthi Chidambaram, Income Tax Case, Prohibition, High Court Denial
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...