×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுகை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

மணமேல்குடி: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து, படகையும் பறிமுதல் செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து நேற்று முன்தினம் 232 விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களுடன் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மணிகண்டன்(31), பாலகிருஷ்ணன்(47), கார்த்திக்(22), சதீஷ்(21) ஆகிய 4 பேர் படகில் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இவர்களது படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்ததாக 4 மீனவர்களையும் சிறைபிடித்து படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தகவலறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இலங்கை அரசு சட்டத்தின்படி, நான்கு மாதங்கள் கழித்து மீனவர்களை விடுவித்தாலும் பல லட்சம் மதிப்புள்ள படகுகளை அரசுடமையாக்கி வருகிறது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், இலங்கை கடற்படை அட்டூழியத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Crossing the border, fishermen, 4 captives, Sri Lanka Navy
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...