×

ராமேஸ்வரம் கோயிலில் அடுத்த முறைகேடு தரிசனக்கட்டண வசூலில் லட்சக்கணக்கில் சுருட்டல்: புதிய புகாரால் பக்தர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தரிசன கட்டணத்தில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் புகார் எழுந்திருப்பது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கடந்த ஜூன் 18ம் தேதி கோயில் ஊழியர்களின் ஆயுட்கால சேமநல நிதியில் ரூ.78 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோயில் நிரந்தர ஊழிர் ஒருவர் கைதான நிலையில், தற்காலிக பணியாளர் ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.தற்போது புதிதாக கோயில் தரிசன கட்டணத்தில் லட்சக்கணக்கில் கையாடல் என்ற தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தம் குளித்தல், சுவாமி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு கோயில் நிர்வாகத்தினால் குறைந்த பட்சம் ரூ.5 முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பக்தர்களிடம் வசூல் செய்யப்பட்டு வந்தது. கோயில் ஊழியர்கள் சிலர் கோயில் நிர்வாகம் வழங்கிய டிக்கெட் போல் போலியான டிக்கெட்டை அச்சடித்து பக்தர்களிடம் பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபடுவது தெரிய வந்ததால், அச்சடித்த கட்டண ரசீதுகள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிர்வாகத்தினால் கையடக்க எலக்ட்ரானிக் அச்சு இயந்திரம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சேவைக் கட்டணம் பெறும் முறை துவங்கப்பட்டது. இதற்காக 24 இயந்திரங்கள் தேவஸ்தான நிர்வாகத்தினால் வாங்கப்பட்டது. தரிசனம், அர்ச்சனை உள்ளிட்டவைகளுக்கு பக்தர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு உடன் பிரின்ட் எடுத்து ரசீது வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 24 கையடக்க இயந்திரங்கள் மூலம் பல வகையான இனங்களுக்கு பக்தர்களிடம் இருந்து அன்றாடம் ஊழியர்களால் பெறப்பட்டும் கட்டணம் சம்பந்தப்பட்ட அலுவலக பணியாளர்கள் வசம் கணக்குடன் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காசாளர் மூலம் வங்கி கணக்கில் போடப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறையே இருந்து வரும் நிலையில், இதில் லட்சக்கணக்கான அளவிற்கு கட்டணத் தொகை வங்கியில் செலுத்தப்படாமல் கையாடல் நடந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.10 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவுப்படி ராமநாத சுவாமி கோயிலில் பெறப்படும் தரிசனம் மற்றும் அபிஷேக கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது சுவாமி அர்ச்சனை, தரிசனம் முதல் அபிஷேகங்கள் வரை பலவகை இனங்களுக்கு சேவைக் கட்டணமாக ரூ.10 முதல் ரூ.10 ஆயிரம் வரை பக்தர்களிடம் கோயில் நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 இதற்காக பயன்பாட்டில் இருந்த 24 கையடக்க எலக்ட்ரானிக் இயந்திரங்களில் பழைய கட்டணத் தொகைக்கு பதிலாக புதிய கட்டணத் தொகையை பதிவு செய்வதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோது 23 இயந்திரங்கள் மட்டுமே கோயில் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்று மட்டும் குறைந்ததால் இதுகுறித்து கோயில் அதிகாரிகள் விசாரணை செய்தபோது கடந்த மூன்று ஆண்டுகளாக 23 இயந்திரங்களில் வசூலான கட்டணத்தொகை மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது. 24வது இயந்திரத்தின் அன்றாட வசூல் பதிவு, கட்டணம் செலுத்திய விபரம் எதுவும் அலுவலக பைல்களில் இல்லை. ஊழியர்களால் ஒப்படைக்கப்படாத இயந்திரத்தின் மூலம் சுவாமி சன்னதியில் ஸ்படிலிங்க தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான கட்டணம் பெறப்பட்டு வந்த நிலையில் குறிப்பிட்ட இயந்திரத்தின் மூலம் பெறப்பட்ட தொகை மூன்று ஆண்டுகளில் பல லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று சக பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.புகாருக்குள்ளான குறிப்பிட்ட கையடக்க இயந்திரத்தை கையாண்ட ஊழியர்கள், கட்டண வசூல் பதிவு செய்யும் அலுவலக பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாகவும், இவர்களின் ஒத்துழைப்பின்றி இச்சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்கள், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்காமல் இருக்க தந்திரம்?
இரண்டு மாதங்களுக்கு முன்பு கோயில் ஊழியர்களின் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில் அலுவலக பணியாளர்கள் சிலருடைய பெயரும் அடிபட்டதால் இதனை விசாரணை மட்டத்திலேயே இழுத்து மூடுவதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கட்டண தொகையில் கையாடல் சம்பவம் வெளியானதால் இதிலும் பலர் சிக்குவார்கள் என்பதாலும், கோயில் நிர்வாகத்தின் மேல் பொதுமக்களிடையே தவறான நோக்கம் உருவாகும் என்பதாலும் 24 கையடக்க இயந்திரத்திற்கு பதில் 23 இயந்திரங்கள் மட்டும் வாங்கப்பட்டு பயன்படுத்தியாகவும், அன்றாட வசூல் பதிவில் இருந்து குறிப்பிட்ட இயந்திரத்திற்கான பதிவுகளை வெளியாட்களை வைத்து கம்ப்யூட்டரில் அழிப்பது போன்ற திட்டங்களை உடன் செயல்படுத்தவும் ஊழியர்கள் சிலர் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Devotees,new ,complaint ,Rameshwaram temple
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...