இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம்: மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடைகால பருவமழை பொய்த்து போனதால் வறட்சி தலைவிரித்தாடியது. கிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பல்வேறு இடங்களில் மழை வேண்டி யாகங்கள் நடந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். சென்னையில் நிலவி வரும் பஞ்சத்தை போக்க 63 கோடி ரூபாய் செலவில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. தற்போது, பருவமழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், மழை நீர் சேமிப்பு தொடர்பாக தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் அதனால் நமக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கு விளையும் பயன்கள் குறித்தும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் வருகிறது. ஆனால், மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு எளிதல்ல. மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம் என உறுதி கொள்வோம் என்று அவர் தனது பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும் என மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Minister SB Velumani tweeted, Request, Rain Water, Saving
× RELATED சுவர் இடிந்து விழுந்த விபத்தில்...